Fact Check
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு அரைமணி நேரத்தில் செல்லும் அதிவேக ரயில் சில தினங்களில் தமிழகத்தில் என்று பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு அரை மணி நேரம், சென்னையிலிருந்து திருச்சிக்கு இரண்டேகால் மணி நேரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் என்பதாக புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் தத்தளித்து வருகின்ற நிலையில் தமிழகத்தில் ரயில், பேருந்து போன்ற மக்கள் போக்குவரத்து வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றன.
இந்நிலையில், “காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு அரைமணி நேரம், சென்னையிலிருந்து திருச்சிக்கு இரண்டே கால் மணி நேரம் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் தமிழகத்தில் இன்னும் சில தினங்களில்” என்கிற வாசகங்களுடன் கூடிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து வைரலாகும் பழைய போட்டோ!
Fact check/ Verification
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு அரைமணி நேரம், சென்னையிலிருந்து திருச்சிக்கு இரண்டே கால் மணி நேரத்தில் செல்லும் அதிவேக ரயில் தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்திய ரயில்வே தொடர்வண்டி குறித்து ஆராய்கையில் ஐசிஎஃப் கட்டுமானத்தில் உருவான “ட்ரெய்ன் 18” என்று அழைக்கப்படும் வந்தே பாரத் ரயில் மட்டுமே அந்த வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் உள்ள ரயில் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த அக்டோபர் 29, 2018 ஆம் ட்ரெய்ன் 18 எனப்படும் வந்தே பாரத் ரயில்களின் சோதனை ஓட்டம் குறித்த செய்தியில் அப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது நமக்குத் தெரிய வந்தது. எனவே, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை அதிவேக சிறப்பு ரயில் குறித்த தகவலின் பேரில் மேலும் ஆய்வில் ஈடுபட்டோம்.

அச்செய்தியின்படி, ட்ரெய்ன் 18 சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பொறுத்த வரையில், வாரணாசி-டெல்லி மற்றும் டெல்லி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா உள்ளிட்ட இரண்டு வழித்தடங்களில் மட்டுமே இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு இதனை விரிவு படுத்தும் திட்டங்கள் இன்னும் செயல்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை.

மேலும், குறிப்பிட்ட வைரல் பதிவு கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதை நம்மால் அறிய முடிந்தது. ஐசிஎஃப் மற்றும் ரயில்வே அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் காஞ்சிபுரம்-சென்னை ரயில் வைரல் பதிவு குறித்த செய்திகள் எதுவும் இல்லை.
எனவே, இந்த செய்தி குறித்து சென்னை ரயில்வேயைச் சேர்ந்த மக்கள் தொடர்பாளர் ஏழுமலை என்பவரிடம் பேசினோம். அப்போது அவர், “குறிப்பிட்ட அப்புகைப்படம் 2018ம் ஆண்டு ஐசிஎஃப் சார்பில் வந்தே பாரத் சோதனை ஓட்டம் தொடர்பாக வெளியான புகைப்படம். நம்முடைய தமிழகம் பொறுத்தவரையில் ரயில் ட்ராக்குகள் 130க்கு அதிகமாக எங்கும் தரம் உயர்த்தப்படவில்லை. மேலும், டெல்லியில் இரண்டு வழித்தடங்களில் மட்டுமே இதுவரையில் வந்தே பாரத் ரயில் செயல்பாட்டில் இருக்கிறது. அதுவும் கூட, மணிக்கு 130 கிமீ என்கிற வேகக்கட்டுப்பாடுடனேயே செலுத்தப்படுகிறது. வந்தே பாரத் திட்டத்தில் மேலும் ஒரு ரயில் வண்டி செய்ய ஐசிஎஃப் தொடங்கியிருந்தாலும் கூட, அது எந்த வழித்தடம் என்பதெல்லாம் ரயில்வே அமைச்சகம் மட்டுமே முடிவு செய்யும். மேலும், தமிழகத்தில் எந்த ரயில்பாதையும் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் புதிதாக வடிவமைக்கப்படவோ, தரம் உயர்த்தப்படவோ இல்லை. எனவே, இந்த செய்தியை யாரும் உண்மை என்று நம்ப வேண்டாம்” என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து ரயில்வே துறை சார்ந்த மற்றொரு அதிகாரியிடம் பேசினோம். அவர், “ரயில்வே குறித்த அறிவிப்புகள் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ பக்கங்களிலோ, பத்திரிக்கை அறிவிப்புகளாகவோ வந்தால் ஒழிய, மற்ற இதுபோன்ற எந்த செய்திகளையும் மக்கள் நம்பி ஏமாறக்கூடாது. மத்திய ரயில்வே அமைச்சகம் தற்போது வரை இதுபோன்ற அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை” என்று நமக்கு விளக்கமளித்தார்.
ரயில்வே செயல்பாடுகள், சென்னை-மைசூர் அதிவேக புல்லட் ரயில் உள்ளிட்ட செய்திகளின் இணைப்புகளை இங்கே இணைத்துள்ளோம்.
Conclusion:
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு அரைமணி நேரம், சென்னையிலிருந்து திருச்சிக்கு இரண்டே கால் மணி நேரத்தில் செல்லும் அதிவேக ரயில் தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் ஆதாரமற்றது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
Ezhumalai, IR
Anbu Selvan, TNIE
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)