Fact Check
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்க விண்ணப்பம்?
நடிகர் விஜய், இன்று தனிக்கட்சி துவங்குவதற்காக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக சில ஊடகங்கள் ப்ரேக்கிங் நியூஸ் வெளியிட்டிருந்தன. இதனையடுத்து இச்செய்தி, சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல வைரலானது.

Fact Check/ Verification:
தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் விஜய். இளையதளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவரை, சில வருடங்களாகவே அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில்தான், இன்று நடிகர் விஜய் அரசியல் பிரவேசம்; தனிக்கட்சியைப் பதிவு செய்தார் என்றெல்லாம் செய்திகள் வெளிவர ஆரம்பித்தன.
மேலும், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற பெயரில் கட்சியைப் பதிவு செய்தி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளார் விஜய் என்றும் தந்தி தொலைக்காட்சி உள்ளிட்ட சில செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஊடகங்கள் துவங்கி சமூக வலைத்தளங்கள் வரை வைரல் ஆன, தமிழக அரசியலில் முக்கிய திருப்புமுனையான இச்செய்தி உண்மையா இல்லையா என்பது குறித்து நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் வாசகர்களுக்கு விளக்கமளிக்க இது குறித்து ஆராய்ந்தோம்.
உண்மையும் பின்னணியும்:
இச்செய்தி குறித்து முதலில் செய்தி வெளியிட்டிருந்த தந்தி தொலைக்காட்சி, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்று கூறியிருந்தது. மேலும், அதற்கான விண்ணப்பம் போன்ற ஒன்றையும், அதில் கட்சித்தலைவர் பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பொருளாளர் ஷோபா என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அச்செய்தி தெரிவித்தது.
ஆனால், செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே நடிகர் விஜயின் அதிகாரப்பூர்வ மக்கள் தொடர்பாளரான திரு.ரியாஸ் அஹமது இச்செய்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், நடிகர் விஜயின் தந்தையான திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்பதை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும், அரசியல் இயக்கமாக தான் பதிவு செய்துள்ள அறிவிப்பிற்கும் நடிகர் விஜய்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது தனது தனிப்பட்ட முயற்சி; மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் இக்கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நியூஸ் 18, புதியதலைமுறை போன்ற செய்தி ஊடகங்கள் இதனைப் பதிவு செய்துள்ளன.
இதற்கிடையில், சினிமா செய்தியாளர்களில் வாட்ஸப் குழு ஒன்றில் ரியாஸ் அவர்கள் அனுப்பிய நடிகர் விஜய் சார்பிலான செய்தி அறிக்கையும் பகிரப்பட்டுள்ளது. அதில், நடிகர் விஜய் தனது தந்தையின் கட்சிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் திரு.ரியாஸ் அவர்கள் பகிர்ந்துள்ளார்.
Conclusion:
எனவே, சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும் பகிர்ந்திருந்த நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த செய்தியில் உண்மையில்லை. அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சிக்காக பதிவு செய்திருக்கும் விண்ணப்பம், நடிகர் விஜயே கட்சி தொடங்க விண்ணப்பித்துள்ளதாக தவறான செய்தியாக பரவியுள்ளது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
Result: Misleading/Partly False
Our Sources:
Twitter (Riaz K Ahmed): https://twitter.com/RIAZtheboss/status/1324342567631138816?s=20
News 18 TN: https://tamil.news18.com/news/tamil-nadu/actor-vijay-political-party-vjr-366523.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)