Fact Check
தேர்தல் நாளில் முஸ்லீம் வாக்காளர்களுக்கு சிறப்பு சலுகைகள் கேட்டாரா கெஜ்ரிவால்?
Claim: தேர்தல் நாளில் முஸ்லீம் வாக்காளர்களுக்கு சிறப்பு சலுகைகள் தரக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்.
Fact: வைரலாகும் கடிதம் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும். ஆம் ஆத்மி தரப்பும் இதை உறுதி செய்துள்ளது.
டெல்லி பிப்ரவரி 05 ஆம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் பாஜக 48 இடங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் தேர்தலின்போது முஸ்லீம் வாக்காளர்களுக்கு சிறப்பு சலுகைகள் செய்து தரக்கோரி ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியதாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அக்கடிதத்தில் முஸ்லீம் வாக்காளர்களுக்கு மூன்று சலுகைகள் கேட்கப்பட்டிருந்தன.
அவை;
- முஸ்லீம் வாக்காளர்களுக்கு மட்டும் மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை ஓட்டளிக்க அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.
- வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கும், வாக்குச்சாவடியிலிருந்து வீட்டுக்கும் வாகன வசதி.
- தாமதத்தை தவிர்க்க எவ்வித அடையாள அட்டையையும் முஸ்லீம் வாக்காளர்களிடம் கேட்க கூடாது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
தேர்தல் நாளில் முஸ்லீம் வாக்காளர்களுக்கு சிறப்பு சலுகைகள் தரக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் ஊடகங்களில் கெஜ்ரிவால் இவ்வாறு ஒரு கடிதம் எழுதியதாகஎவ்வித செய்தியும் வந்திருக்கவில்லை. இதனையடுத்து கெஜ்ரிவாலின் எக்ஸ் பக்கத்தில் ஆராய்ந்தோம். அதில் இவ்வாறு ஒரு கடிதம் எழுதியதாக எவ்வித பதிவும் இல்லை.
ஆனால் வேறு தருணங்களில் தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதிய கடிதமும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு எழுதிய கடிதமும் நமக்கு கிடைத்தது. அக்கடிதங்களில் கடிதத்தின் முடிவில் வலது ஓரத்தில் அரவிந்த் கெஜிரிவால் கையொப்பமிட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் வைரலாகும் கடிதத்தில் இடது ஓரத்தில் கெஜ்ரிவாலின் கையொப்பம் இடம்பெற்றிருந்தது.


அதேபோல் வைரலாகும் கடிதத்தில் தேதி ஏதும் குறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால் அதில் “NCO/25/10” எனும் வரிசை எண் குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இதை ஆதாரமாக வைத்து தேடியதில் அவ்வரிசை எண்ணையுடைய கடிதம் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு ஜனவரி 19, 2025 அன்று எழுதிய கடிதம் என அறிய முடிந்தது.
அக்கடிதத்தையும் வைரலாகும் கடிதத்தையும் ஒன்றொடொன்று ஒப்பிட்டு பார்க்கையில், கெஜ்ரிவால் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை எடிட் செய்தே வைரலாகும் கடிதம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியானது.


இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக்கொண்டு வைரலாகும் கடிதம் குறித்து விசாரித்தோம். அவர்கள் இக்கடிதம் போலியானது, இவ்வாறு ஒரு கடிதத்தை கெஜ்ரிவால் எழுதவில்லை என தெரிவித்தனர்.
Also Read: சங்கராச்சாரியார் கும்பமேளாவில் காவல்துறையால் தாக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
தேர்தல் நாளில் முஸ்லீம் வாக்காளர்களுக்கு சிறப்பு சலுகைகள் தரக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தை எடிட் செய்தே இந்த பொய் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
இந்த உண்மையானது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Report from India Today, Dated January 01, 2025
Report from India Today, Dated January 19, 2025
Response from AAP
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்