Fact Check
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் உண்மையா?
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32 கோடி மட்டும் ஒதுக்கிவிட்டு, முன்னாள் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவிடக் கட்டுமானத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.39 கோடி ஒதுக்கியுள்ளதாகத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழகத்தில் பள்ளிகளை ஒருங்கிணைத்து அவற்றிற்கான நிதி மேம்பாடு, தேவையான வசதிகளை உருவாக்கும் பள்ளிக்கல்வித்துறை என்பது மிக முக்கியமான மக்கள் அரசின் அங்கம்.
Also Read: காசி ரத்னேஸ்வரர் ஆலயம் பைசா கோபுரத்தை விட உயரமானதா?
இந்நிலையில், தமிழக சட்டமன்ற பட்ஜெட்டில் முன்னாள் தமிழக முதல்வராக பதவி வகித்த மறைந்த மு.கருணாநிதியின் நினைவிடக் கட்டுமானத்திற்கு ரூ. 39 கோடி ஒதுக்கிவிட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கும் வெறும் 32 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதாக செய்தி ஒன்று வைரலாகிறது.
“தமிழகத்திலுள்ள மொத்த பள்ளி கல்வித்துறைக்கு 32 கோடியாம். ஒத்த சுடுகாட்டுக்கு மட்டும் 39 கோடியாம்” என்கிற வாசகங்களுடன் அப்புகைப்படம் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification:
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் குறித்த உண்மைநிலை அறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில், முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதியின் நினைவிடத்திற்கு ரூபாய்.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்தபோது விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியானது. இதனை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பகிர்ந்துள்ளனர்.
தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறைக்கு உண்மையில் தமிழக பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்கையில், வரிசை எண் 101ல் பள்ளிக்கல்வி என்கிற தலைப்பின் கீழ், “பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விதமாக இந்த வரவு-செலவு திட்டத்தில் மொத்தமாக 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னணி செய்தி நிறுவனங்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.
இதிலிருந்து, பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி வைரல் பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று வெறும் ரூ.32 கோடி அல்ல; 32 ஆயிரத்து 599.54 கோடி என்பது உறுதியாகிறது.
Conclusion:
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)