Fact Check
ஆ.ராசா கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகப் பேசினாரா?
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா அவர்கள், கந்த சஷ்டிக் கவசத்தை விமர்சித்து, பரப்பரப்பை உண்டாக்கிய கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகப் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Fact Check/Verification
திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா அவர்கள். இவர் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தவர்.
இவர் இந்தியாவையே புரட்டிப் போட்ட 2ஜி வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டவர். இவ்வழக்கானது மத்தியிலும் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வருவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயினும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் டிசம்பர் 21, 2017 அன்று ராசா அவர்கள் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் .
ஆ.ராசா அவர்கள் சமீபத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேர்காணல் ஒன்றில் பங்குப்பெற்றார்.
அதில் கந்த சஷ்டி விவகாரம் குறித்துக் கேட்கையில், அவர் கந்த சஷ்டிக் கவசத்தைக் குறைத்துப் பேசியதாகவும் கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகப் பேசியதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
கந்த சஷ்டிக் கவச சர்ச்சை:
கறுப்பர் கூட்டம் எனும் அமைப்பு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தது. அதில் கடவுள் மறுப்புத் தொடர்பானக் கருத்துகளை வீடியோக்களாக வெளிவிட்டுக் கொண்டிருந்தது.
அதிலும் ஆபாசப் புராணம் என்றத் தலைப்பில் புராண, இதிகாசங்களை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தது. அதில், கந்த சஷ்டிக் கவசத்தை விமர்சித்து இவ்வமைப்பு வெளியிட்ட வீடியோவானது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
தமிழகம் முழுவதும் இதுக்குறித்து பலர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இவ்வீடியோவில் பேசிய சுரேந்திரன் நடராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டது.
கறுப்பர் கூட்டம் அமைப்பு திமுகவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது என்ற ஒரு கருத்தும் பொது வெளியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு ஆ.ராசா அவர்கள் கொடுத்தப் பேட்டியில் கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகப் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இச்செய்திக் குறித்து நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.
உண்மை என்ன?
ஆ.ராசா அவர்கள் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு 42 நிமிடங்களுக்கு பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதிலிருந்து 52 வினாடி வீடியோ கிளிப்பைத் தனியாக வெட்டி இச்செய்தியானது பரப்பப்பட்டு வருகிறது.
இக்கிளிப்பைக் கூர்ந்து கவனித்தப்பின் நமக்கு சில விஷயங்கள் தெளிவாகியது.
உண்மையில், ஆ.ராசா அவர்கள் கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவாகவோ அல்லது கந்த சஷ்டிக் கவசத்தைக் குறித்து இழிவாகவோ எதுவும் பேசவில்லை.
ஒரு கருத்து என்றால் அதை விவாதியுங்கள். கந்த சஷ்டிக் கவசத்திற்கு இப்படி பார்வை உள்ளது என்று ஒருவர் கூறியுள்ளார். அது தவறு, அதற்கு இதுதான் அரத்தம் என்று பலர் கூறியுள்ளனர். கருத்தை கருத்தால் பேசுங்கள். இதில் ஸ்டாலினும் ராசாவும் பேசுவதற்கு என்ன உள்ளது?
என்றே ஆ.ராசா அவர்கள் பேசியுள்ளார்.
Conclusion
நம் விரிவான ஆய்வுக்குப்பின், ஆ.ராசா அவர்கள் கறுப்பர் கூட்டதிற்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை என்றும், இது ஒரு குறிப்பிட்டத் தரப்பினரால், திமுக மேல் உள்ள துவேஷம் காரணமாக வேண்டுமென்றே அவர் பேசாத விஷயங்களைப் பேசியதாகத் திரித்துப் பரப்பப்படுகிறது என்றும் தெளிவாகியுள்ளது.
Result: Misleading
Our Sources
Facebook Page: https://www.facebook.com/krish.tendulkar.5/videos/1263302810669662/
News 7: https://www.youtube.com/watch?v=1XoIiMcmPNQ
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Usபக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)